Thursday 26 November 2015

அரசமைப்பு கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தல் - சோனியா அச்சம்


பாஜக ஆட்சியில் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று மக்கள் அவையில் அது குறித்த தனது அச்சத்தை தெரிவித்தார். 
மக்களவையில் அவர் பேசும்போது, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை வரைவுசெய்தபோது அதில் பங்கேற்காதவர்கள் இப்போது அதன் மீது பிரமாணம் எடுக்கிறார்கள். உரிமை கோருகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதியாக இருப்பதாக விவாதம் நடத்துகிறார்கள். இதைவிட நகைப்புக்குரியது வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த சில மாதங்களாக நாம் பார்க்கும் சம்பவங்கள் அரசமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை. அரசமைப்புச் சட்டத்தை வரைவு செய்தபோதும் சுதந்திர போராட்டத்திலும் காங்கிரஸ் பங்கு முக்கியமானது.

அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இறுதி பலன் மோசமாகவே இருக்கும் என்றே அம்பேத்கர் எச்சரித்துள்ளார். அம்பேத்கரை இப்போது அரவணைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதற்குதான் அதன் மீது உரிமை கோரமுடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியிலிருந்து அரசியல் கோட்பாடு, பொருளாதாரம் பற்றி மேல்படிப்பு முடித்து திரும்பிய அம்பேத்கரின் உன்னதத் திறமையை காங்கிரஸ்தான் கண்டறிந்தது. எஸ்.டி.களின் நலனுக்காக போராடியவர் அவர்.
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இந்தச் சட்டத்தை வரைவுசெய்த கமிட்டிக்கு அம்பேத்கரைவிட வேறு சிறந்த தலைவராக வேறு இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார் ராஜேந்திர பிரசாத்" என்றார் சோனியா காந்தி.


சோனியாவின் இந்த கருத்துக்கு, "காங்கிரஸ் பார்வை எத்தகையது? ", என்று தமிழ் தி இந்து ஆன்லைனில் கருத்து கேட்பு பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது அதில் காலை 11.00 மணிவரை பதிவான வாக்குகள்:
சகிப்பின்மை விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருப்பது...

               சரியான பார்வை : 57%
               தவறான கருத்து : 15%
               வழக்கமான அரசியல் : 28%
               மொத்த வாக்குகள்: 2339

Saturday 21 November 2015

சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


மழையின் காரணமாக தொண்டு நிறுவன இல்லம் நீரால் சூழப்பட்டுள்ளதால் தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மாணவர்கள் இது போல் இளம் வயதிலேயே சேவை செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இது அவர்களின் மனதை நல்ல நிலையில் வைப்பதோடு சமூக அக்கறையுடன் அவர்கள் வளர இது வழி வகுக்கும். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்ட போது தாம்பரம் காவல்துறையினர் முஸ்லிம் மாணவர்கள் மீது மட்டும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தது தற்போது நினைவுக்கு வருகிறது . இதில் இந்த தொண்டு நிறுவன குழந்தைகளை மழை பாதிப்பிலிருந்து மீட்டு தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆல்வின்ராஜ் அவர்கள் தான் இந்த பள்ளியில் தனது மேற்பார்வையில் தங்க வைத்து உதவி வருகிறார். அவரின் செயலை பாராட்டிய மாணவர்கள் அவரால் சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். 
காவல்துறையினர் மாணவர்கள் விசயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் சில கட்சிகள் அல்லது பாசிச அமைப்புகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து வழக்குகளை பதியவைப்பது, மாணவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்வதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, அவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும், அவர்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளையும், இலட்சியங்களையும் விதைப்பார்களேயானால் மாணவர்கள் தமது சிறிய தவறுகளைக் கூட உணர்ந்து திருந்தி சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே காவல்துறை தனது செயல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்களும் இது போன்ற சேவைகளையும், தனது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும்.

Friday 6 November 2015

கோவையில் வெடிகுண்டு தயாரித்த ஒருவர் இறப்பு, மூன்று பேர் கைது

கோவையில் உக்கடம் பைபாஸ் சாலை அருகே கீரைத்தோட்டம் என்ற பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரது வீட்டில் அவரது மகன் நவீன் மற்றும் மூன்று பேர் சேர்ந்து நாட்டு வெடிகளை தயார் செய்து உள்ளனர். நேற்று(05.11.2015) அன்றுவெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நவீன் மற்றும் இருவர் காயங்களுடன் தப்பித்தனர். வீடும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

      காவல்துறையினர் சென்று பார்த்த போது வீடு முழுக்க வெடி மருந்துகளும், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருள்களும் பதுக்கி வைத்திருந்துள்ளனர். காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்துள்ளனர். வெடிகளை தயாரித்தவர் சிவா என்பவராவார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தயாரித்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த சண்முகம், தேவி, துளசிமணி ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் வெடிவிபத்தின் போது வீட்டில் இல்லை. ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் வீட்டில் வசித்தவர்களை கைது செய்துள்ளனர். 

அந்த வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. உண்மையில் அவர்கள் தயாரித்தது பட்டாசு என்றால் வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழ காரணம் என்ன? வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் சண்முகத்தின் மகன் நவீன் உட்பட மூவர் வெடிகளை தயாரித்துள்ளனர். அந்த மூவர் யார்? இறந்தவரின் விபரம் என்ன? வெடிகளை தயாரித்தவர்களின் பிண்னணி என்ன என்பதை காவல்துறை தெரியப்படுத்தவேண்டும். ஆனால் எதுவும் வெளிவராது. இத்துடன் அந்த சம்பவம் முடித்து வைக்கப்படும். ஊடகங்களும் இந்த செய்திக்கு முக்கியம் கொடுக்காது. 

     இந்த வெடிகளை தயாரித்தவர்களில் ஒருவரது பெயராவது முஸ்லிமாக இருந்திருந்தால் இந்த செய்தி தான் இன்றைய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியிருக்கும். தொலைகாட்சிகளில் விவாதம் என்ற பெயரில் கத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் சிவா, நவீன் ஆகிய பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் இல்லையே அதனால் செய்தி இத்துடன் முடிந்து விடும். பாருங்கள் ஊடகங்கள் ஒரு செய்தியை எப்படி திசை மாற்றுகின்றன. அதன் மூலம் ஒரு சமூகத்தையே எப்படி  நிலைகுலையச் செய்கின்றன என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும். ஊடகங்களுக்கான அறம் இதுவல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

Thursday 5 November 2015

வெறுப்பு அரசியலின் உச்சத்தில் பாஜக! - தலைகுனியும் இந்தியா!


இந்தியாவில் சிவசேனா, இந்து சேனா, பஜ்ரங்தள், ஆர்எஸ்.எஸ், பாஜக எம்பிக்கள், பொருப்பாளர்கள் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் விரோத போக்கை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். 
பாடகர் குலாம் அலி கான்

பாகிஸ்தானைச் சார்ந்த கஜல் பாடகர் குலாம் அலி கான் மும்மையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பாட சிவசேனா பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
              இந்நிலையில் கஜல் பாடகர் குலாம் அலி நவம்பர் 8ம்தேதி டெல்லியிலும், லக்னோவிலும் தாம் நடத்தவிருந்த கச்சேரிகளை ரத்து செய்துள்ளார். இந்தியாவில் நிலைமை சரியாகும் வரை அங்கு செல்லமாட்டேன். சமீபத்திய நிகழ்வுகளால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும், இந்திய ரசிகர்கள் தமக்கு எப்போதும் மிகுந்த ஆதரவளிப்பவர்கள், இருகரம் நீட்டி வரவேற்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
            மேலும், "நான் ஒரு பாடகன். நான் பாடலைப்பற்றி மட்டும் பேசுவேனே தவிர அரசியலைப்பற்றி அல்ல" என்றும் பிபிசிக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.


ஷாருக்கான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்...
நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் இந்தியாவில் தீவிர சகிப்பின்மை இருந்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார். உடனே அதற்கு எதிர்வினையாக பாஜப எம்.பி. ஆதித்யநாத் என்பவர், "ஷாருக்கானின் மொழியும் தீவிரவாதத்தை ஆதரிப்பது தான் என்று கூறியதோடு, அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு அவர் பாகிஸ்தான் செல்வதை தாம் வரவேற்பதாகவும்", தெரிவித்துள்ளார். 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய் வர்கியா தொடர்ந்து ட்விட்டரில் ஷாருக்கானுக்கு எதிராக எழுதி வந்தார். அதன் உச்சமாக, "ஷாருக்கான் ஒரு தேசத்துரோகி என்றும், அவர் இந்தியாவில் வசித்தாலும் அவரது ஆன்மா பாகிஸ்தானில் தான் உள்ளது", என்றும் தெரிவித்தார். பலத்த எதிர்ப்பு காரணமாக தனது கருத்துக்களை வாபஸ் பெற்றுவிட்டாலும் அதற்காக மன்னிப்புக் கேட்க அவர் மறுத்துவிட்டார்.

பிஹார் தேர்தலும் பாகிஸ்தானும்...
மக்களிடையே மதத்துவேசத்தை விதைத்து அதை வாக்குச் சாவடிகளில் அறுவடை செய்யும் வெறுப்பு அரசியலை பாஜக தொடர்ந்து செய்துவருகிறது. குஜராத் கலவரம், சமீபத்திய உ.பி.கலவரம் என அவர்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத மனப்பான்மையை விதைத்து வருகின்றனர். பிஹார் தேர்தலில் இதுவரை நடை பெற்ற 3 கட்ட வாக்குப்பதிவுகளில் நிதிஷ்குமார் கட்சிக்கு அதிக ஆதரவு இருந்துள்ளது. எனவே தோல்வி பயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில்,"பிஹாரில் பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்", என்று கூறியுள்ளார். இது வெறுப்பு அரசியலின் உச்சமாகும். இந்தியாவில் அதுவும் ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பாகிஸ்தானில் ஏன் பட்டாசு வெடிக்கப்போகிறார்கள். டெல்லியில் பாஜக தோற்றபோது ஏன் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கவில்லை? பிஹாரில் கல்வியறிவு பெற்றவர்கள் மிகக் குறைவு. வறுமையும் அங்கு அதிகம் எனவே அந்த மக்களிடத்தில் பாஜக தான் இந்திய தேசத்தின் ஆதரவுக் கட்சி போலவும் மற்ற கட்சிகள் அப்படி இல்லை என்பது போலவும், பாகிஸ்தான் பாஜகவைக் கண்டு பயப்படுவது போலவும் சித்தரிக்க முயற்சிக்கிறார் அமித்ஷா. 
டெல்லியில்பாஜக பெண் எம்பி பிராச்சி,"ராமனின் பிள்ளைகள் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்றும் வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானின் பிள்ளைகள் என்றும் அவர்கள் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று பேசினார்.

வெறுப்பு அரசியல் கெஜ்ரிவால் கண்டனம்
பிஹாரில் பாஜக பலத்த தோல்வியை சந்திக்க வேண்டியது மிக அவசியம். அப்போது தான் வெறுப்பு அரசியலால் நாட்டில் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாஜக உணரும்", என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். பிஹார் மக்கள் நிதிஸ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துரிமை, சகிப்புத்தன்மைக்கு எதிராக பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் கொலைகள்...
பேரா. கல்புர்கி
இந்து மதங்களில் நிலவும் மூடநம்பிக்கைகள், உருவ வழிபாடுகளுக்கு எதிராக விமர்சித்து வந்த மூத்த எழுத்தாளர் பேராசிரியர்.எம்.எம். கல்புர்கி(வயது 77) ஆகஸ்டு மாதத்தில் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். பிப்ரவரியில் கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். 2013ல் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்ததால் இந்துத்துவவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவர் மஹாராஸ்டிராவில் மூடநம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவர பாடுபட்டவர் என்பது மிக முக்கியமானது. இப்படி நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து பாசிச கருத்துக்களும் செயல்களும் மேலோங்கி வருவதை நாட்டின் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்து வருகிறார். இதுவரை அவர் இது போன்ற செயல்களை கண்டிக்கவில்லை.

மாட்டுக்கறி அரசியல்
பசு புனிதமாக்கப்பட்டு அது பெரும் அரசியலாக இந்தியாவில் தலையெடுத்து வருகிறது. தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய்யான தகவலை பரப்பி முஸ்லிம் முதியவர் முஹம்மது அக்லாக் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் அவரது வீட்டுக்குள் புகுந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கறியை எடுத்துச் சென்றது சோதனை செய்ய என்பது எவ்வளவு மோசமான செயல். ஒரு படுகொலை நிகழ்ந்துள்ளது அதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அது மாட்டுக்கறியா? ஆட்டுக்கறியா என்று சோதனை செய்ய காவல்துறை விரும்புகிறது. சரி கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறது? அவர் எதை உண்ண வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறையா? காவி பயங்கரவாதமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்? காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் காரணம் ஒரு வெறுப்பு அரசியலே!

முதல்வருக்கு கொலை மிரட்டல்
கடந்த வாரம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். உணவு ஒருவரின் தனிப்பட்ட உரிமை என செய்தியளர்களிடையே தெரிவித்திருந்தார். உடனே விஸ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜரங்தள், உள்ளிட்ட இந்து  அமைப்புகள் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். உச்சகட்டமாக பாஜகவின் ஷிமோகா மாவட்ட செயலாளர் சென்ன பசப்பா, "மாட்டுக்கறி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையை கால்பந்து விளையாடவும் தயங்கமாட்டேன்", என்று கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மட்டும் தான் இந்துத்துவவாதிகளில் வெறிப்பேச்சுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், சித்தராமையாவிற்கு ஒரு கிலோ பன்றி இறைச்சியை பாரசலில் அனுப்பி வைத்தார். தனது கட்சியினருக்கும் சித்தராமையாவிற்கு பன்றி இறைச்சியை பார்சலில் அனுப்புமாறு கட்டளையிட்டுள்ளார். 

               கருத்துரிமைக்கு ஆதரவாகவும், சகிப்புத்தன்மை நிலவி நாட்டில் ஒற்றுமையும், ஜனநாயகமும் தழைக்க வேண்டும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறி நாட்டின் உயர்ந்த விஞ்ஞானியான பார்கவா, எழுத்தாளர்கள், சினிமா படைப்பாளிகள் என பலரும் தான் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப தந்து தன் எதிர்ப்பை தெரிவிக்கும் சூழலுக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருப்பதற்கான காரணம் சங்பரிவார் கும்பலின் சகிப்புத்தன்மையற்ற பாசிச போக்கும், செயல்பாடகளும் தான் காரணமாகும். இந்த சகிப்புத்தன்மையற்ற தொடர் நிகழ்வுகளின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.




Wednesday 4 November 2015

தமிழ்த்தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள் - பொ.வேல்சாமி (நன்றி: தமிழ் தி இந்து)



தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே நிலவும் உறவுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து தமிழகம் வரலாற்றுபூர்வமாகவே வேறுபட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 800 ஆண்டுகளாகச் சாதிகளுக்கு இடையே நடந்த மோதல்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ‘வலங்கை இடங்கை போராட்டங்கள்’ என்று கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் பதிவாகியுள்ளன. ஆனால் இருவேறுபட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பகை கொண்டு போராடினார்கள் என்ற தகவல்கள் மிகவும் குறைவு. ஏன் அத்தகைய தகவல்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

தமிழக வரலாற்றில் இஸ்லாமியர்களைப் பற்றிய குறிப்புக்கள் கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்தே பதிவாகியிருப்பதைக் காணமுடியும். 14-ம் நூற்றாண்டில் தோன்றிய ‘பல்சந்தமாலை’ என்ற சிற்றிலக்கியத்துடன் இஸ்லாமிய இலக்கியப் பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. அடுத்த வந்த காலகட்டங்களில் பல்வேறு இஸ்லாமியப் புலவர்கள் தங்களுடைய மதம் சார்ந்த இலக்கியங்களை எழுத ஆரம்பித்தனர். ‘சீறாப்புராண’த்தைப் பாடிய உமறுப் புலவரைத் தமிழ் வரலாறு நன்கு அறியும்.

இந்து புராணங்களின் தாக்கம்

அதேநேரத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த மிகச் சிறந்த புலவர்கள் பலர் இந்துமதம் சார்ந்த புராணங்களில் இருந்தும் தங்களுக்கான கதைப்பொருளை எடுத்து அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளனர். அத்தகையவர்களில் சையது முகமது அண்ணாவியார், கா. பீர்காதறொலி ராவுத்தர், இளையான்குடி ஸ்பெஷல் மேஜிஸ்திரேட்டும் சிவகங்கை தாலுகா போர்டு உறுப்பினருமான எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர், பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

சையது முகமது அண்ணாவியார் பாடிய மகாபாரத நூலின் பெயர் ‘சாந்தாதி அசுவமகம்’. மகாபாரதத்தில் உள்ள 14-ம் பருவத்துக் கதையை 4,104 பாடல்களில் இவர் பாடியுள்ளார். பாரதப்போர் முடிந்தவுடன் போரினால் ஏற்பட்ட மனக்கவலையை ஆற்றிக்கொள்வதற்காக தருமன் வியாசர் கூறியபடி அசுவமேதயாகம் செய்ததை விவரிக்கும் பகுதி இது. சாந்தம் என்றால் அமைதி, அசுவம் என்றால் குதிரை, மகம் என்றால் யாகம். எனவே இந்தப் பகுதிக்கு சாந்தாதி அசுவமகம் என்று இவர் பெயரிட்டுள்ளார்.

இப்புலவரைப் பற்றி கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் 1992-ல் சையது முகமது அண்ணாவியார் நினைவுமலரில் எழுதியுள்ள ஒரு பகுதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பில் மேற்கோள் காட்டுகின்றனர். “நான் அரசியலில் இருந்தபோது பேராவூரணிக்குக் கீழ்பால் உள்ள கொன்றைக்காடு எனும் ஊருக்குச் சென்றிருந்தேன். இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஒரு விவசாயி வீட்டின் முன்புறத்தில் படுத்திருந்தேன். 70 வயது உடைய ஒருவர் வந்தார். தனக்குள்ள சாரீரவளம் கூட்டிப் பாடிடலானார். அவர் பாடியது மகாபாரத்தில் உள்ள கர்ணனைப் பற்றிய நெடிய பாட்டு. “இது எந்தப் பாரதத்தில் உள்ளது?” எனக் கேட்டேன். “அதிராம்பட்டினம் அண்ணாவியார் பாடியது” என்றார். “தனிநூலா?” என்று கேட்டேன். “ஆமாம், கர்ணபருவம் என்ற பெயரில் இப்பொழுது நான் பாடிய அம்மானைப் பாடலை அவர்தான் பாடியுள்ளார்” என்று பகர்ந்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. “எங்களின் (இந்துக்களின்) 18 புராணங்களையும் அம்மானை அம்மானையாக அண்ணாவியார் எழுதியுள்ளாரே உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். பாடியது இப்போதுள்ள அண்ணாவியார் அல்ல. இவருடைய பாட்டனார் (அவரும் இதே பெயர் உடையவர்தான்) எழுதியது. இந்த அண்ணாவியாருக்கே வயது 90-க்கு மேல். இவருடைய பாட்டனார் காலம் 100 ஆண்டுகளையும் தாண்டியது. அவ்வாறு இருந்தும் இன்றைக்கும் கிராமங்களில் அவர் பாடல் பாடப்படுகிறது. அந்த அண்ணாவியாரை ‘தெய்வம்’ என்று குறிப்பிட்டார் அந்த முதியவர். இவர் இந்துபுராணக் கதைகள் பலவற்றை அம்மானை என்ற இசைப்பாடல் வடிவத்தில் பாடியிருப்பதாகத் தகவல்கள் உண்டு. ஆயினும் இப்பொழுது அச்சில் கிடைக்கும் நூல் ‘மகாபாரத அம்மானை’ என்ற ஒன்றுதான். இந்நூல் ரோஜா முத்தையா நூல் நிலையத்தில் உள்ளது.

1904-ல் பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு நடந்ததைச் சிறப்பித்து எம்.கே.எம். அப்துல்காதிறு ராவுத்தர் பாடிய ‘பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து’ என்ற நூலைப் பற்றி மதுரை விவேகபாநு பத்திராதிபர் எம்.ஆர்.கந்தசாமி கவிராயர் புகழ்ந்து கூறியிருக்கிறார்.

கா. பீர்காதறொலி ராவுத்தர் 1868-ல் திருவாசகத்தைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் திருவாசகத்தின் முதல் பாடலாக உள்ள சிவபுராணம் என்பது பல பிரதிகளில் சிவபுராணத்து அகவல் என்று எழுதப்பட்டிருந்தது. திருவாதவூரர் புராணத்திலும் அகவல் என்றே இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவது பொருந்தாது என்பதை யாப்பருங்கலவிருத்தி, தொல்காப்பியம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள பகுதியை மேற்கோளாகக் காட்டிய பீர்காதறொலி ராவுத்தர், தொல்காப்பியச் சூத்திரப்படி இப்பாடல் கலிவெண்பா என்று குறிப்பு எழுதினார். இந்தக் குறிப்பை பிற்காலத்தில் திருவாசகத்தைப் பதிப்பித்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

கருவாட்டுக் கடை பாடம்

திருச்சியைச் சேர்ந்த முத்துவீரப்ப உபாத்தியாயரின் மாணவர்கள் சுமார் 3 தலைமுறைகளாக தொல்காப்பியத்தைப் படித்தும் படிப்பித்தும் வந்தனர். அத்தகைய மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர் 1908-ல் மறைந்த பிச்சை இப்ராஹிம் புலவர். இவருடைய மாணவர்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுக்குச் சிறந்த உரைகளை வரைந்த பெரும்புலவர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.

திருச்சி நகரில் பெரிய கருவாட்டுக்கடை முதலாளியாக இருந்த இப்ராஹிம் புலவர், பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாகம் கேட்டு கொண்டதற்கு இணங்க அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ்க் கற்பித்து வந்தார். ரா. ராகவையங்கார் போன்ற பெரும்புலவர்களே அவரது கருவாட்டுக் கடைக்கு வந்து பல செய்திகளைக் கேட்டுக்கொண்டதாகவும் அவ்வாறு வந்த புலவர்கள் பெரும்பான்மையோர் சைவர்கள் ஆகையால் தங்களுடைய மூக்கைப் பொத்திக்கொண்டு பாடம் கேட்டனர் என்றும் என்னுடைய ஆசிரியர் பாவலர் ச.பாலசுந்தரம் கூறியிருக்கிறார். (பேராசிரியர் ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதி இருக்கிறார். இந்த உரையை கோபாலய்யர் போன்ற பெரும்புலவர்கள் பாராட்டி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது).

அள்ளித் தந்த கொடையாளர்கள்

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை 1915-ம் வருடத்தில் சவுரிபெருமாள் அரங்கனார் என்ற பெரும்புலவரால் முதன்முதலாக வெளியிடப்பட்டது. குறுந்தொகைக்குப் பழைய உரை ஏதும் இல்லாததால் பதிப்பாசிரியரே நூல் முழுமைக்கும் சிறந்த உரை எழுதியுள்ளார். அத்தருணத்தில் வெகு சிலர் தனக்கு உதவி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார். அத்தகையவர்களுள் அவர் பணிபுரிந்த கல்லூரியின் முதல்வர் மஹம்மத் இப்ராஹிம் குரைஷி, குறிப்பிடத் தக்கவர்.

தமிழ்மொழியில் வியாச பாரதத்தை முழுமையாக மொழிபெயர்க்கச் செய்து (சுமார் 10,000 பக்கத்தில்) வெளியிட்டவர் ம.வீ. இராமானுஜாசாரியார். இவர் உ.வே.சாமிநாத அய்யருடன் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துவந்தவர். 1903-லிருந்து 1933 வரை சுமார் 30 ஆண்டுகள் மகாபாரத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு அதனை முழு மையாகச் செய்து முடித்தவர். அந்தக் காலகட்டங்களில் மிகப்பலரிடம் அவர் உதவிகளைப் பெற்றிருக்கிறார். அப்படி உதவி செய்தவர்கள் பலரையும் அவர் நன்றியுடன் தன் வனபர்வம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் இருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் ஆடுதுறையைச் சேர்ந்த தோல் வியாபாரி என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு இஸ்லாமியர்கள் பலர் தமிழ்மொழியின் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் பல்வேறு காலங்களில் தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறார்கள். கடந்த கால தமிழ்நாட்டின் வரலாற்றை முறையாகத் திருப்பி பார்ப்பவர்களுக்கு இது தெளிவாகப் புலப்படும்.

பொ. வேல்சாமி, இலக்கியப் பண்பாட்டு ஆய்வாளர், ‘கோவில் நிலம் சாதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.