Thursday 6 April 2017

கொகோ கோலா குடி பானமா? அழுக்கு நீக்கியா?

கொகோ கோலா குடி பானமா? அழுக்கு நீக்கியா?

கோகோ கோலா என்பது இன்று உலகறிந்த ஒரு பிராண்டு ஆனால் அது குடிக்க ஏற்றதாக உள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். வெறும் விளம்பரத்தினாலே அது மக்களிடையே ஒரு மதிப்பு மிக்க பிராண்டாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சச்சின் டெண்டுல்கர், உலக அழகி ஐஸ்வர்யாராய், அமிதாபச்சன், சாருக்கான் இன்னும் எத்தனையோ விளையாட்டு, சினிமா பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு அதன் செலவெல்லாம் அதை நம்பி வாங்கி குடிக்கும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது.கொகோ கோலா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. அதன் பாட்டில்களினுள் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் கிடந்ததாக , அப்படியே பூச்சிகள் கிடப்பது மட்டுமா சர்ச்சையாகிறது. இல்லை அதனுள் அளவுக்கு அதிகமான இரசாயத்தன்மை இருப்பதும், அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதும் பலர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. நாட்டில் அது தடை செய்யப்படவில்லை. 
நீர் ஆதாரங்கள் பாதிப்பு:
இந்திய நீர் ஆதாரங்கள் இந்த கொகோ கோலா அன் கோவால் அதிகம் பாதிக்கப்படுகிறது. கோலா மற்றும் பாட்டில் குடிநீர் மற்றும் இன்னபிற துணை பிராண்டுகளை அந்நிறுவனம் நமது இந்திய மண்ணில் உற்பத்தி செய்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கேரளாவில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் அந்த ஆலை மூடப்பட்டது, ஆனால் தாமிரபரணி கரையோரங்களில் இன்னும் நீர் உறிஞ்சப்பட்டே வருகிறது. விளம்பர மோகங்களினால் மக்கள் அந்த பானங்களை அதிகம் விரும்பும் போக்கு மாற வேண்டும், இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் அதிகம் விரும்ப வேண்டும். அதுவே மாற்றத்திற்கான வழி.
கோக்கின் Ph மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே உள்ளது. இதன் சல்ப்பியூரிக் அமில அளவும் ஒரு புள்ளிக்கு அதிகமாக உள்ளது.
இந்த பானத்தை தினசரி அருந்துபவர்களில் 44 சதவீதம் வளர்சிதைமாற்றம் ஏற்படுவதாக தேசிய இதயம்,நுரையிரல் மற்றும் இரத்த மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
மேலும் 30 சதவீதம் இடுப்பு  சுற்றளவு அதிகரிக்கிறது.
31 சதவீதம் உடல் பருமன் அதிகரிக்கிறது.
கோக் கறை நீக்கி:
துரு பிடித்த கறைகளை கோக் சிறந்த முறையில் நீக்குிறது.
டாய்லெட் பீங்கானை சுத்தம் செய்ய பயன்படுகிறது
சீன பீங்கான் அழுக்குகளை நீக்கி பளிச்சிட வைக்கிறது

Tuesday 29 November 2016

என்ன செய்ய நினைக்கிறது என்ஐஏ?


கோவையில் சசிக்குமார் என்ற இந்து முன்னணி பொருப்பாளரை அவர்களுக்குள் நடந்த பிரச்சினையின் காரணமாக அவர்களே தீர்த்துக்கட்டிவிட்டு பலியை முஸ்லிம்கள் மீது போட முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை. சவத்தை தூக்கிக்கொண்டு பெரும் கலவரங்கள் செய்தார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள வணிக அங்காடி பொருட்கள் திருடப்பட்டது, தீவைத்து எரிக்கப்பட்டது, அடித்து நொறுக்கப்பட்டது. 

ஆனால் இதை இந்துக்களே கடுமையாக எதிர்த்தார்கள். ஆர்எஸ்எஸ் வகையறாக்களை தூற்றினார்கள். உடனே இறங்கியது டெல்லியிலிருந்து என்ஐஏ என்ற மத்திய புலனாய்வு அமைப்பு. ஐஎஸ் தீவிரவாதிகள் என்று கூறி 16 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. விசாரித்தது... விசாரித்தது... கடைசியில் மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு 3 இளைஞர்கள் மீது சந்தேகம் என்று கூறிவிட்டு அவர்களை கொச்சினுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்று விசாரித்து விட்டு இவர்களிடம் ஏதும் ஆதாரம் இல்லை என்று கூறி விட்டு அவர்களை சேதாரம் ஆக்கிவிட்டுச் சென்றது என்.ஐ.ஏ. இங்குள்ள தமிழக அரசின் காவல்துறையிடம் கூட சொல்லாமல் கைது செய்தது ஏன்? தெரியவில்லை. காரணம் அவர்கள் மறுப்பார்கள் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சாதித்தது என்ன? 
கோவையில் முஸ்லிம்கள் கலவரக்காரர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் அமைதிகாத்தனர். இதனால் இந்து மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான நம்பிக்கை நன்மதிப்பு உயர்ந்தது கூடவே பாஜகவின் மீதான நம்பிக்கை சிதைய ஆரம்பித்தது. இதை மீட்பதற்காகவே மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் என்ஐஏவை கோவையில் களமிறக்கியது ஆளும் மத்திய பாஜக அரசு. மீடியாக்கள் முதல் பக்கங்களில், செய்தி போஸ்டர்களில் முஸ்லிம்களுக்கெதிரான தனது விசத்தை கக்கியது. 

இதோ அடுத்து மதுரையில் அல்காயிதா தீவிரவாதிகள் என்று 4 இளைஞர்களை கைது செய்துள்ளது என்ஐஏ. இதிலும் அதே நடைமுறை தான் தமிழக காவல்துறையிடம் தெரிவிக்காமல் தனது பலத்தைக் காட்டியுள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு. இது பாஜக தமிழகத்தில் காலூன்ற போடும் திட்டங்களில் ஒன்று தான் என்றாலும் தொடர்ந்து இதில் முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவது பரிதாபத்திற்குரியது. 

500,1000 ரூபாய் செல்லாத அறிவிப்பால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் இளைஞர்கள் பாஜக மீது கோபமாய் உள்ளனர். இந்த பிரச்சினைகளை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்த முஸ்லிம் இளைஞர்களின் கைது செய்துள்ளது மத்திய புலானாய்வு அமைப்பு. இது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயலாகும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். மேலும் மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கினால் முஸ்லிம் இளைஞர்கள் நாடு முழுவதும் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதிப்புகளுக்கும் ஆற்பட்டு வருவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு உகந்தது அல்ல.

Tuesday 22 December 2015

டெல்லி பாலியல் குற்றவாளி விடுதலை சிறார் என்பதால் மட்டும் தானா?

பெயர் தெரியாத பாலியல் பயங்கர குற்றவாளி
நிர்பயா என்று மரணத்திற்கு பின் புனைப்பெயர் வைக்கப்பட்ட ஜோதிசிங் என்ற இளம் பெண் பேரூந்தில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கடைசியில் அவளது பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சிதைக்கப்பட்ட நிலையில் பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். இது போன்ற கொடூரங்கள் டெல்லியில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாடு முழுக்க ஆதிக்கவாதிகளால், சாதி வெறியர்களால், மத வெறியர்களால் தொடர்ந்து இது போன்ற பயங்கரமான பாலியல் வன்முறைகள் நடத்தப்படுகிறது. ஆனால் பல இடங்களில் வழக்குகள் கூட பதியப்படுவதில்லை. தமிழகத்தில் சிறுமிகள் புனிதா, திருச்சி தவ்பீக் சுல்தானா என பட்டியல் நீள்கிறது. ஆனால் எடுத்த நடவடிக்கைகள் பெரிதாய் ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும். காரணம் இங்கு நீதியின் முறை அப்படிப்பட்டது. 

டெல்லியில் நிர்பயா என்ற ஜோதி சிங் வழக்கு நாடு முழுக்க பேசப்பட்டது. ஊடகங்களின் வெளிச்சம் உலகளாவிய அளவில் பாய்ச்சப்பட்டது. காரணம் அதற்குள் ஒளிந்திருந்த அரசியல் பாஜக காங்கிரசுக்கு எதிராக இந்த பிரச்சினையை பெரிதாக கிளப்பியது. நடுத்தர வர்க்க மீடியா வெளிச்சப் போராட்டக்காரர்களை இறக்கி அதில் வெற்றியும் பெற்றது பாஜக. ஆனால் இன்று அதே பாஜக ஆட்சி தான் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்புகளைப்பற்றி வாய் திறக்க எவரும் முன்வரவில்லை. காரணம் பாஜகவின் அரசியல் யுக்திகள் அப்படியானது தானே. 
உச்சநீதிமன்றம்


நீதிமன்றம் குற்றவாளி கைது செய்யப்படும்போது 18 வயது பூர்த்தியாகவில்லை அதனால் அவன் சிறுவன் என்று கூறி மூன்றாண்டுகள் சிறைக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது. தற்போது அவனுக்கு வயது 21. இப்போது பலர் அவனது விடுதலைக்கு எதிராக போராடி வந்தாலும், சிலர் வலைப்பக்கங்களில் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் போன்ற பழிவாங்குதல் கூடாது என்றும் தி இந்து தமிழ் வலைப்பக்கத்தில் சிந்தனைக்களம்- இப்படிக்கு இவர்கள் (http://goo.gl/kZkiww ) பகுதியில் கூட ச.சீ.இராஜகோபாலன் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு முன்பு இவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ச.சீ.இராஜகோபாலன் நிர்பயாவின் பெற்றோர் அந்த கொடூரனை ஏற்று திருத்த வேண்டும் என்று கூறுகிறார். அதை ஏன் அவரே செய்யக்கூடாது. 

சட்டத்துக்கு புறம்பாக இளம் குற்றவாளியை சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று இந்நாட்டின் உச்சநீதிமன்றம் கூறி விடுதலை செய்கிறது. அதுவும் பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்து அவன் குற்றமிழைத்தவன் என்று தெரிந்தும் அவனை விடுதலை செய்யும் நீதிமன்றம் அவனை ரகசியமாக விடுதலைசெய்து பாதுகாப்பதோடு அவனுக்கு உதவித்தொகையும், தையல் எந்திரமும் வழங்கியுள்ளதாக செய்திகளில் பார்க்கின்றோம். இன்று வரை அவனது பெயரைக் கூட வெளியிடவில்லை.

ஆனால் அவன் ஒருவேளை முஸ்லிம் பெயர் கொண்டவனாக இருந்திருந்தால் கூட்டு மனசாட்சிக்கு உட்படுத்தி நிதிபதிகள் வேறு மாதிரியான தீர்ப்பை கொடுத்திருப்பார்கள்.

கோவை குண்டுவெடிப்பு விசாரணைக்காக, காவல்துறை 7 சிறார்களை கைது செய்து சிறையிலடைத்தது. அதற்காக போலியான வயது சான்றிதழ்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்தது ஆனால் அதை ஆராய்ந்து கூட பார்க்காமல் அவர்களை சிறையிலடைத்தனர் நீதிபதிகள். பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறி 11 மற்றும் 13 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்தது. இவர்களுக்கெல்லாம் இந்தச் சட்டங்கள், நீதி நெறிமுறைகள் பொருந்தாதா? அப்படியானால் இந்நாட்டில் நீதி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதா? 
ஜோதிசிங்கின் பெற்றோர்கள் பத்ரி சிங்கும்,ஆஷாதேவியும் தொடர்ந்து போராடுகிறார்கள் இந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பாவம் இப்போது எந்த அரசியல்வாதிகளும் இவர்களை கண்டுகொள்வதில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இந்திய பிரதமர் மோடியைக் கூட ஒரு முறை அவர்கள் சந்தித்தார்கள். எதுவும் நடக்கவில்லை. நடக்காது என்று தெரிந்து தான் இப்போது வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.

இது மனுதர்ம நீதியின் நீட்சி அல்லது இந்துத்துவ பாசிச நீதி என எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். அவனது விடுதலை, அவனது இருப்பு இங்கு பாசிசவாதிகளுக்கு தேவையாக இருக்கலாம். ஒரு வேளை அவன் குஜராத் வன்புணர்வுகளில் சம்பந்தப்பட்டவனாக இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து குழந்தையை தனது சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் எறிந்தவனாய் இருக்கலாம். அதற்காகவே பழக்கப்பட்டவர்களில் ஒருவனாய் இருக்கலாம். காரணம், அவர்கள் செய்யும் செயலைத்தான் டெல்லியில் நிர்பயா மீதும் செய்துள்ளான் இறுதியில் இரும்பு கம்பி கொண்டு அவளது பெண்ணுறுப்பில் குத்தி சிதைத்துள்ளான். இத்தகைய குணம் படைத்தவர்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். குஜராத் இனப்படுகொலைகள், வன்புணர்வுகளில் ஈடுபட்டவர்களையும், சூலாயுதங்களையும் கம்பிகளையும் கொண்டு பெண்ணுறுப்புகளை சிதைத்தவர்களையும், கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழித்து தீயிட்டவர்களையும் இந்த பாலியல் கொலையை செய்தவர்களையும் பொருத்திப் பாருங்கள் ஒரு உண்மை உங்களுக்குப் புரியும்.

Thursday 26 November 2015

அரசமைப்பு கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தல் - சோனியா அச்சம்


பாஜக ஆட்சியில் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று மக்கள் அவையில் அது குறித்த தனது அச்சத்தை தெரிவித்தார். 
மக்களவையில் அவர் பேசும்போது, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை வரைவுசெய்தபோது அதில் பங்கேற்காதவர்கள் இப்போது அதன் மீது பிரமாணம் எடுக்கிறார்கள். உரிமை கோருகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதியாக இருப்பதாக விவாதம் நடத்துகிறார்கள். இதைவிட நகைப்புக்குரியது வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த சில மாதங்களாக நாம் பார்க்கும் சம்பவங்கள் அரசமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை. அரசமைப்புச் சட்டத்தை வரைவு செய்தபோதும் சுதந்திர போராட்டத்திலும் காங்கிரஸ் பங்கு முக்கியமானது.

அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இறுதி பலன் மோசமாகவே இருக்கும் என்றே அம்பேத்கர் எச்சரித்துள்ளார். அம்பேத்கரை இப்போது அரவணைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதற்குதான் அதன் மீது உரிமை கோரமுடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியிலிருந்து அரசியல் கோட்பாடு, பொருளாதாரம் பற்றி மேல்படிப்பு முடித்து திரும்பிய அம்பேத்கரின் உன்னதத் திறமையை காங்கிரஸ்தான் கண்டறிந்தது. எஸ்.டி.களின் நலனுக்காக போராடியவர் அவர்.
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இந்தச் சட்டத்தை வரைவுசெய்த கமிட்டிக்கு அம்பேத்கரைவிட வேறு சிறந்த தலைவராக வேறு இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார் ராஜேந்திர பிரசாத்" என்றார் சோனியா காந்தி.


சோனியாவின் இந்த கருத்துக்கு, "காங்கிரஸ் பார்வை எத்தகையது? ", என்று தமிழ் தி இந்து ஆன்லைனில் கருத்து கேட்பு பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது அதில் காலை 11.00 மணிவரை பதிவான வாக்குகள்:
சகிப்பின்மை விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருப்பது...

               சரியான பார்வை : 57%
               தவறான கருத்து : 15%
               வழக்கமான அரசியல் : 28%
               மொத்த வாக்குகள்: 2339

Saturday 21 November 2015

சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


மழையின் காரணமாக தொண்டு நிறுவன இல்லம் நீரால் சூழப்பட்டுள்ளதால் தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மாணவர்கள் இது போல் இளம் வயதிலேயே சேவை செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இது அவர்களின் மனதை நல்ல நிலையில் வைப்பதோடு சமூக அக்கறையுடன் அவர்கள் வளர இது வழி வகுக்கும். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்ட போது தாம்பரம் காவல்துறையினர் முஸ்லிம் மாணவர்கள் மீது மட்டும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தது தற்போது நினைவுக்கு வருகிறது . இதில் இந்த தொண்டு நிறுவன குழந்தைகளை மழை பாதிப்பிலிருந்து மீட்டு தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆல்வின்ராஜ் அவர்கள் தான் இந்த பள்ளியில் தனது மேற்பார்வையில் தங்க வைத்து உதவி வருகிறார். அவரின் செயலை பாராட்டிய மாணவர்கள் அவரால் சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். 
காவல்துறையினர் மாணவர்கள் விசயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் சில கட்சிகள் அல்லது பாசிச அமைப்புகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து வழக்குகளை பதியவைப்பது, மாணவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்வதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, அவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும், அவர்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளையும், இலட்சியங்களையும் விதைப்பார்களேயானால் மாணவர்கள் தமது சிறிய தவறுகளைக் கூட உணர்ந்து திருந்தி சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே காவல்துறை தனது செயல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்களும் இது போன்ற சேவைகளையும், தனது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும்.

Friday 6 November 2015

கோவையில் வெடிகுண்டு தயாரித்த ஒருவர் இறப்பு, மூன்று பேர் கைது

கோவையில் உக்கடம் பைபாஸ் சாலை அருகே கீரைத்தோட்டம் என்ற பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரது வீட்டில் அவரது மகன் நவீன் மற்றும் மூன்று பேர் சேர்ந்து நாட்டு வெடிகளை தயார் செய்து உள்ளனர். நேற்று(05.11.2015) அன்றுவெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நவீன் மற்றும் இருவர் காயங்களுடன் தப்பித்தனர். வீடும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

      காவல்துறையினர் சென்று பார்த்த போது வீடு முழுக்க வெடி மருந்துகளும், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருள்களும் பதுக்கி வைத்திருந்துள்ளனர். காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்துள்ளனர். வெடிகளை தயாரித்தவர் சிவா என்பவராவார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தயாரித்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த சண்முகம், தேவி, துளசிமணி ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் வெடிவிபத்தின் போது வீட்டில் இல்லை. ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் வீட்டில் வசித்தவர்களை கைது செய்துள்ளனர். 

அந்த வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. உண்மையில் அவர்கள் தயாரித்தது பட்டாசு என்றால் வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழ காரணம் என்ன? வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் சண்முகத்தின் மகன் நவீன் உட்பட மூவர் வெடிகளை தயாரித்துள்ளனர். அந்த மூவர் யார்? இறந்தவரின் விபரம் என்ன? வெடிகளை தயாரித்தவர்களின் பிண்னணி என்ன என்பதை காவல்துறை தெரியப்படுத்தவேண்டும். ஆனால் எதுவும் வெளிவராது. இத்துடன் அந்த சம்பவம் முடித்து வைக்கப்படும். ஊடகங்களும் இந்த செய்திக்கு முக்கியம் கொடுக்காது. 

     இந்த வெடிகளை தயாரித்தவர்களில் ஒருவரது பெயராவது முஸ்லிமாக இருந்திருந்தால் இந்த செய்தி தான் இன்றைய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியிருக்கும். தொலைகாட்சிகளில் விவாதம் என்ற பெயரில் கத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் சிவா, நவீன் ஆகிய பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் இல்லையே அதனால் செய்தி இத்துடன் முடிந்து விடும். பாருங்கள் ஊடகங்கள் ஒரு செய்தியை எப்படி திசை மாற்றுகின்றன. அதன் மூலம் ஒரு சமூகத்தையே எப்படி  நிலைகுலையச் செய்கின்றன என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும். ஊடகங்களுக்கான அறம் இதுவல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.